search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரணசி தொகுதி"

    பிரதமர் மோடி போட்டியிடவுள்ள வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #PMModi #BJP #PriyankaGandhi

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    இரு தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். வாரணாசி எம்.பி.யாக நீடித்தார்.

    இந்த தேர்தலில் அவர் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை.

    இறுதிக்கட்ட தேர்தல் மே 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான பெரும்பாலான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து விட்டது.

    வாரணாசி தொகுதி தேர்தலும் 19-ந் தேதிதான் நடைபெறுகிறது. ஆனாலும், இதற்கான வேட்பாளரை மட்டும் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. நேற்று 18 தொகுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

    அதில், வாரணாசி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதிலும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

    காங்கிரஸ் ஏதோ ரகசிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும், இதனால் தான் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை வாரணாசி தொகுதியில் போட்டியிட வைக்க இருப்பதாகவும், கடைசி நேரத்தில் அவரை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

    பிரியங்கா இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாத நிலையில் திடீரென கடந்த மாதம் அவர் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதி பொறுப்பும் வழங்கப்பட்டது.

    அங்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள பிரியங்கா பம்பரமாக சுழன்று வருகிறார். இவரது வருகையால் உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    பிரியங்கா கங்கை நதியில் 3 நாள் தொடர்ந்து படகு பயணம் செய்து நதிக்கரை ஓரம் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். அந்த பயணத்தை இறுதியாக வாரணாசியில் முடித்தார்.

    அப்போது வாரணாசி தொகுதி எம்.பி.யாக இருக்கும் மோடியை கடுமையாக விமர்சித்தார். அயோத்தியில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா மோடியை பற்றி காரசாரமாக பேசினார்.

    வாரணாசியில் மோடி 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளார். இந்த 5 ஆண்டில் ஏதேனும் ஒரு கிராமத்துக்கு அவர் வந்திருக்கிறாரா? அவருக்கு வெளிநாட்டுக்கு செல்லத்தான் நேரம் இருக்கிறது. கிராம மக்களை சந்திப்பதற்கு நேரம் இல்லை என்று கூறினார்.

    வாரணாசியை குறி வைத்து அவர் பிரசாரம் செய்ததே அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்று கூறப்படுகிறது.

    மேலும் அவர் கடந்த 28-ந் தேதி தொண்டர்கள் மத்தியில் பேசும் போது, நான் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டுமா? என்ற கேள்வியையும் கேட்டார்.

    ராகுல்காந்தியும் இது சம்பந்தமாக சூசகமாக தெரிவிக்கும் போது, பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது பற்றி அவரே முடிவு எடுத்து கொள்ளலாம் என்றார்.

    பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றால் அதை ராகுல்காந்தி உறுதியாக கூறி இருப்பார். ஆனால், இப்படி மழுப்பலாக சொல்லி இருப்பதால் பிரியங்கா போட்டியிடுவது உறுதி என்றே கூறப்படுகிறது.

    அவர் வாரணாசி வேட்பாளராக மனு தாக்கல் செய்யும் இறுதி நாள் அன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சூரஜ்வாலாவிடம் கேட்ட போது, இதுபற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று கூறினார்.

    பாரதிய ஜனதா தலைவர் ஷா நவாஸ் உசேன் கூறும்போது, சில அனுமானமான வி‌ஷயங்கள் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. மோடியை எதிர்த்து போட்டியிட காங்கிரசுக்கு பொறுத்தமான வேட்பாளர் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறினார்.

    வாரணாசி தொகுதியில் கடந்த தேர்தலில் மோடி போட்டியிட்ட போது 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டு 2-ம் இடம் பிடித்தார். #PMModi #BJP #PriyankaGandhi

    ×